தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை

போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

Updated on
2 min read

தூத்துக்குடி / கோவில்பட்டி: குளத்தூர் அருகே வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் (மார்ச் 11) மாலை கிராமத்துக்கு அருகே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் உட்பட பல்வேறு அமைப்புகள், கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை மார்ச் 19-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் மாணவியை கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (மே 25) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை போலீஸார் அழைத்து வந்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இன்று காலை 11 மணியளவில் இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்களை பிற்பகல் 12.45 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி மீண்டும் பிற்பகல் 12.45 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியதும் நீதிபதி பிரீத்தா தண்டனை விவரங்களை வாசித்தார். அவர் கூறுகையில், “குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 17 வயதில் மகள் உள்ளார். அவருடைய மனைவியும், மகளும் அவரை பிரிந்து வாழ்கின்றனர். மகள் வயது பிள்ளையை பார்க்கும் போது அவளை பாதுகாக்க வேண்டும் என்ற மனது குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இல்லை. அவளை பாதுகாக்கத் தவறி மிருகத்தனமாக நடந்துள்ளார்.

இந்தக் குற்றத்தை செய்யும் போது அவருக்கு மகள் நினைவு வராதது, வேதனையளிக்கிறது. குற்றவாளியை நம்பி அவருடைய தாய் மட்டும் அவருடன் உள்ளார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்குவது முறையாக இருக்காது. அதனால் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவற்றுக்கு சேர்த்து இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்.

தண்டனையை குறைக்க ஏதாவது ஒரு காரணம் இருக்குமா என்று பார்த்தேன். ஆனால் இல்லை. மேலும் இரட்டை தூக்கு தண்டனையோடு மேலும் ஓராண்டு சிறை தண்டனையையும் சேர்த்து விதிக்கிறேன். இதில் அவர் ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனை காலத்தை கழித்துக் கொள்ளலாம்,” என்றார்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் கூறுகையில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரன் பிரிவு 104 பி.என்.எஸ். சட்டத்தின்படி தூக்கு தண்டனையும், பிரிவு 6 போக்சோ சட்டத்தின்படி தூக்கு தண்டனையும், பிரிவு 127(2) பி.என்.எஸ். சட்டத்தின்படி ஒராண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனைபோது சேகரிக்கப்பட்ட தடயங்களும், குற்றம்சாட்டப்பட்டவரின் ரத்த மாதிரிகளும் உள்ள டி.என்.ஏக்கள் ஒரே மாதிரியாக இருந்ததையடுத்து, அந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக அரசு தரப்பில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் தான் 10 நாட்களுக்குள் சூழ்நிலை சாட்சியங்கள், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.

76 நாளில் தீர்ப்பு

தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய 76-வது நாளில் இரட்டை தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 10-ம் தேதி மாணவி கொலை செய்யப்பட்டார். குற்றப்பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட்டு ஏப்ரலில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. மே 21-ம் தேதி விசாரணை நிறைவடைந்தது. இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆயுள் தண்டனை

கடந்த 2020-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் பாப்பா (65) என்ற மூதாட்டியிடம் நகைகளை திருடி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த போலீஸார் தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கடந்த ஆண்டு தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அவருக்கு கடந்த ஆண்டு டிச.18-ல் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிச.24-ம் தேதியில் இருந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இதற்காக அவர் சாயல்குடியில் இருந்து வேடநத்தம் வழியாக குறுக்குச்சாலை வழியாகவே தூத்துக்குடி வந்து சென்ற போது தான், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

<div class="paragraphs"><p><em>கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்</em></p></div>
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in