

சென்னை: 2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்களை அனுப்பிய வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளரை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர். இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த அவரை, குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் கூடுதல் போலீஸ் எஸ்பி புருஷோத்தமன் மற்றும் துணை போலீஸ் எஸ்பி ரெபோனி தலைமையிலான தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் விசாரணைக்காக காவலில் எடுத்தனர். தமிழகம் முழுவதும் இவருக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
வணிக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல்வாதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து 1,500-க்கும் மேற்பட்ட அநாமதேய (Anonymous) வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த மிரட்டல் இ-மெயில்களை தொடர்ந்து விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து மிரட்டல்களும் பின்னர் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
தனது அடையாளத்தை மறைப்பதற்காக குறியாக்கம் செய்யப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள், மெய்நிகர் தனியார் வலைப்பின்னல் (VPN), டார்க் வெப் மற்றும் வெளிநாட்டு சர்வர்களை பயன்படுத்தி இ-மெயில்களை அனுப்பியதால் விசாரணை சிக்கலானதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவில் போலீஸ் எஸ்பி-யாக பணியாற்றிய ஐ.ஷானாஸ் தலைமையிலான விசாரணையின்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டது. மிரட்டல் இ-மெயில்களில் ஒன்றுக்கு சரத், தவறுதலாக தனது தனிப்பட்ட இ-மெயில் முகவரியில் இருந்து பதில் அனுப்பியதன் மூலம் அவரது டிஜிட்டல் தடயத்தை போலீஸார் கண்டறிந்து அடையாளம் உறுதி செய்தனர்.
அதன் பின்னர் சுமார் 6 மாதங்கள் அவரது நடவடிக்கைகளை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் சர்குலர்' பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை நேரடியாக 33 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை மாநகர போலீஸ், சைபர் க்ரைம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளன. விமானங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து அனுப்பப்பட்ட மிரட்டல்களின் அடிப்படையில் வழக்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் சரத் சுப்பிரமணியன் சங்கர் தனியாக செயல்பட்டாரா அல்லது வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட சரத் சுப்பிரமணியன், கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.