

கொலை செய்யப்பட்ட விக்கி என்கிற நீலகண்டன், ( அடுத்தப்படம் ) சந்துரு (எ) சந்திரசேகரன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
படுநெல்லி கிராமத்தில் ஆடித் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் விழாவான நேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த போதையிலிருந்த சில இளைஞர்கள் ஒலிப்பெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்பக் கோரி தகராறில் ஈடுபட்டனர்.
இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது.
இந்நிலையில், போதையிலிருந்த அந்த கும்பல் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் ஆகிய இருவரை ஏற்கெனவே இருந்த முன்பகையைக் காரணமாக வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடல்களை மீட்க முயன்றபோது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தடுத்து நிறுத்தி, உரிய பாதுகாப்பு வழங்காத போலீஸாரே இதற்குக் காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பதற்றத்தை தவிர்க்கும் வகையில் படுநெல்லி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரிக்கரை போலீஸார் தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.