

சென்னை: தங்கும் விடுதியில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹிதய் உசேன் (23). இவர் சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த லாட்ஜில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்த ஹிதய் உசேனை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது அறையை சோதனையிட்டபோது ஏராளமான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 810 போதை மாத்திரைகள், 78 கிராம் ஹெராயின் பவுடர், போதைப் பொருள் பயன்படுத்துவதற்கான 200 குப்பிகள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஹிதய் உசேனை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கெனவே 4 பேர் கைது
இதே லாட்ஜில் கடந்த ஜூலை 17-ம் தேதி மயிலாப்பூர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தி, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு திரிபுராவை சேர்ந்த துஷார் உசேன் என்பவர் தலைவராக செயல்பட்டு வருவது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமறைவாக உள்ள துஷார் உசேனை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார்? சென்னையில் வேறு எங்கெல்லாம் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன? என்பது குறித்தும் தனிப்படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.