

ஆரோக்கியராஜ், சுரேஷ்
சென்னை: தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரம், தரம் உயர்வுக்கான அனுமதி போன்றவற்றை பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் திமுக நிர்வாகி பி.டி.அரசகுமாரை (59) கடந்த 27-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (எ) ராஜா (39), திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோர் அரசகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது. இவர்கள் அரசகுமாரின் உறவினர்கள் ஆவர்.
பள்ளிகளுடன் எந்த தொடர்பும் இல்லாத அவர்கள், அரசுகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளின் தூண்டுதலின்பேரில், பள்ளி நிர்வாகிகளை பல்வேறு இடங்களில் வரவழைத்து பணத்தை வசூலித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் உள்பட 190 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.