

சென்னை: உயர் ரக கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாரிமுனை ராஜாஜி சாலையில் ஒரு கும்பல் உயர் ரக கஞ்சா வைத்திருப்பதாக சென்னை காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அப்பிரிவு போலீஸாரும் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாரும் நேற்று அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அவர்களது பையில் ரூ.2 கோடி மதிப்புள்ள இரண்டே கால் கிலோ உயர் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அதைப் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவைச் சேர்ந்த அமிருதீன் (36), திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த நவீன்குமார் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தனர் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.