ஏற்காடு மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஏற்காடு மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

சேலம்: ஏற்காடு அருகே குப்பனூர் மலைப்பாதையில் கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர். அவருடன் காரில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் சபரீஷ் (26). இவர் எடப்பாடியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரும், எடப்பாடியைச் சேர்ந்த அவரது நண்பர்களாக ஜீவா (26), பாலாஜி (47), தேவன் (55), அழகிரி (47) ஆகியோரும் என மொத்தம் 5 பேர் காரில் ஏற்காட்டுக்கு சென்றனர்.

ஏற்காட்டில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர்கள், ஏற்காடு குப்பனூர் அருகே தங்குவதற்காக முன்பதிவு செய்திருந்த தனியார் விடுதிக்குச் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

வாணியார் செல்லும் வழியில் உள்ள தனியார் எஸ்டேட்டைக் கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மலைப்பாதையின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீஸார், உள்ளூர் மக்களின் உதவியுடன் காரில் சிக்கியிருந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சபரீஷ் உயிரிழந்தார். மற்ற 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அழகிரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்காடு மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு
கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? - அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை

X