

சந்திரசேகரன், சோமசுந்தரம்
கோவை: கோவையில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.2.37 கோடி மோசடி செய்த இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பெரியமணலி பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ஈமுக்கோழி பண்ணையை சந்திரசேகரன்(48), சோமசுந்தரம்(55) ஆகியோர் நடத்தி வந்தனர். வாடிக்கையாளர்களை கவர இவர்கள் அறிவித்த கவர்ச்சி திட்டங்களை நம்பி, நூற்றுக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு லாப தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப தரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். விசாரணையில், மொத்தம் 115 பேரிடம் ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பண்ணை உரிமையாளர்கள் சந்திரசேகரன், சோமசுந்தரம், காசாளர் அமுதா, பங்குதாரர்கள் ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று முன்தினம் நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பளித்தார். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சந்திரசேகரன், சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.