

நவீன்
சிவகங்கை: சிவகங்கையில் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் தவெகவைச் சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியைச் சேர்ந்தவர் நவீன் (26). தவெகவைச் சேர்ந்தவரான இவர், நேற்று மாலை சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுக்கடையையொட்டி உள்ள மதுக்கூடத்துக்குச் சென்றார். மது அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கும், அங்கு வந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்தவர்கள் நவீனை வாளால் வெட்டிக் கொன்றனர். அப்போது மதுக்கூடத்தில் இருந்த மற்றவர்கள் அலறியபடி வெளியே ஓடினர்.
பின்னர், தப்பியோடிய குற்றவாளிகள் தாங்கள் செல்லும் வழியில் சூரக்குளம் பகுதியில் நின்றுகொண்டிருந்த மக்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றனர். தகவலறிந்து மதுக்கூடம் முன்பாக திரண்ட நவீனின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர் இதையடுத்து அங்கு விரைந்து வந்த எஸ்பி சிவப்பிரசாத், டிஎஸ்பி அமல அட்வின் மற்றும் சிவகங்கை நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதன்தொடர்ச்சியாக, டி.புதூரைச் சேர்ந்த மதன்ராஜ், சிவகங்கை போஸ் சாலையைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
ஏற்கெனவே இந்த மதுக்கூடத்தில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அதோடு மிக அருகிலேயே ரயில் நிலையம், கோயில் உள்ளன. இதனால், இந்த மதுக்கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கு அருகேயுள்ள மதுக்கடையை மூட உத்தரவிட்டும் அதிக வருவாய் வருவதால் இந்த மதுக்கடையை மூடவில்லை. அதற்குப் பதிலாக மக்களுக்கு இடையூறு இல்லாத கடையை மூடியுள்ளதாக கூறப்படுகிறது. இனியாவது பிரச்சினைக்குரிய இந்த மதுக்கடையை மூட கோரிக்கை எழுந்துள்ளது.