

சுரேஷ், ஸ்ரீராம்
சென்னை: காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சென்னை முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ராமாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் ராமாபுரம் திருமலை நகர் பூங்கா அருகே போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், போலீஸார் அவர்களின் உடைமைகளைச் சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் ஏராளமான வலி நிவாரண மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், ஒருவர் மதுரவாயலைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சுரேஷ் (23), மற்றொருவர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (19) என்பதும், இருவரும் தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்திலிருந்து இந்த வலி நிவாரண மாத்திரைகளைக் குறைந்தவிலைக்கு வாங்கி வந்து, சென்னையில் சட்டவிரோதமாக விற்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 1,380 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் விற்பனைப் பணமான ரூ.1.47 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் கடத்தலில் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.