

சென்னை: கடனை திரும்பக் கேட்டு தொழில் நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
வளசரவாக்கம், எம்.ஜி.சக்கரபாணி நகரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் (34). ஒன்றரை ஆண்டுகளாக ரெடிமேடு காம்பவுண்டு சுவர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
தொழில் வளர்ச்சிக்காக கடந்த ஜனவரி மாதம் நெற்குன்றத்தைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவரிடம் ரூ.2.10 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
பின்னர், கடந்த மாதம் வரையில் பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள பணத்தை செலுத்தவில்லை. எனவே பாலாஜி கடந்த 11-ம் தேதி தனது நண்பருடன் சுரேஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த பாலாஜி இரும்புக் கம்பியால் சுரேஷை தாக்கி காரில் கடத்தினார். பின்னர் போகும் வழியிலும் அடித்து பணம் கேட்டார். இதையடுத்து சுரேஷ்குமார் தனது பழைய முதலாளி விஜயகுமார் என்பவரிடமிருந்து ஜிபே மூலம் ரூ.50 ஆயிரம் பெற்று பாலாஜிக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை ஒரு வாரத்தில் தர வேண்டும் எனக்கூறி காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பினர்.
காயம் அடைந்த சுரேஷ் குமார் சிகிச்சைக்குப் பின்னர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து, காரில் கடத்தி தாக்கிய பாலாஜி, அவரது கூட்டாளியான சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த நரசிம்மன் (31) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.