புதுச்சேரி இளைஞர் மரணத்தில் திருப்பம்: 12 நாட்களுக்குப் பின் கொலை வழக்கு விபத்து வழக்காக மாற்றம்

விபத்து
விபத்து
Updated on: 
1 min read

புதுச்சேரி: கடந்த 12 நாட்களாக புதுச்சேரியில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்த போலீஸார், தற்போது அதனை விபத்து வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.

புதுவை உப்பளம் ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27), தனியார் விடுதி மேலாளரான இவர் கடந்த 2ம் தேதி இரவு வாணரப்பேட்டை கோவிந்த் செட்டியார் தோட்டம் பகுதி சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். முதலியார்பேட்டை போலீஸார் தமிழ்ச்செல்வன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.

இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் 250-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர். மேலும் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆனால் துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்வழக்கை போலீஸார் விபத்து வழக்காக மாற்றியுள்ளனர். இதுபற்றி விசாரித்தபோது, "கடந்த இரண்டாம் தேதி இரவு போதையில் இருந்த தமிழ்செல்வன் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்துள்ளார்.

அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் தமிழ்செல்வன் மீது உரசி சென்றுள்ளது. இதில் தமிழ்செல்வன் முகத்தில் எதிரில் சென்ற மோட்டார் சைக்கிளின் பாகங்கள் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றுள்ளது. தற்போது இந்த மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளை போலீஸார் அடையாளம் கண்டு விசாரித்தனர்.

இதனையடுத்து கொலை வழக்கு, விபத்து வழக்காக மாற்றப்பட்டு முதலியார்பேட்டை போலீஸார் விசாரித்தனர். அப்போது, தமிழ்ச்செல்வன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு கொலை வழக்கிலிருந்து விபத்து வழக்காக மாற்றப்பட்டுள்ளது" என்றனர்.

விபத்து
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

X