

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, வீரராகவன் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன்தினம் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு மதுபோதையில் இருவர் வந்தனர்.
அவர்கள் எடையாளர் டேனியல் (30) என்பவரிடம் சென்று, “அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை சரியான அளவில் வழங்காமல், அதைத்திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறீர்களா” எனக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
பில் போட்டுக் கொண்டிருந்த எழுத்தர் கலையரசன் (33) அவர்களைத் தடுக்க முயன்றார். அவரையும் அருகில் கிடந்த உருட்டுக்கட்டை மற்றும் நாற்காலியால் போதை ஆசாமிகள் தாக்கியுள்ளனர்.
இதில் ரேஷன் கடை ஊழியர்கள் இருவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ரேஷன் கடை கண்காணிப்பாளர் அம்பிகாபதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் விரைந்து சென்று காயம் அடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப் பதிந்து தலைமறைவான புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரதீப்குமார் (33), அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தவெக உறுப்பினர் என கூறப்படுகிறது. அது குறித்தும் போலீஸார் விசாரிக் கின்றனர்.