

பிரதிநிதித்துவப்படம்
விருதுநகர்: டாஸ்மாக் லாரி டெண்டர் தொடர்பாக அருப்புக்கோட்டையில் அமைச்சர் பெயரைக் கூறி, ரூ.25 லட்சம் வசூலித்த தவெக நகர செயலாளர்கள் 2 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தவெக நகரச் செயலாளர் கார்த்திகேயன், மேற்கு நகரச் செயலாளர் சதீஷ்குமார். இந்த இருவரையும் தொடர்புகொண்ட அருப்புக்கோட்டையை சேர்ந்த சில நபர்கள், தங்களுக்கு டாஸ்மாக் குடோனிலிருந்து மதுக்கடைகளுக்கு பாட்டில்களை ஏற்றிச் செல்லும் லாரி டெண்டர் எடுத்துக் கொடுக்குமாறு அணுகியுள்ளனர்.
அதற்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷிடம் கூறி, அந்த டெண்டரை பெற்றுத் தருவதாகவும் அதற்கு பணம் தர வேண்டும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர். அதன்படி, லாரி டெண்டர் பெற்றுத் தருவதற்காக ரூ.25 லட்சம் வரை 2 பேரும் வசூல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் கவனத்துக்கு கட்சியினர் சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் தரப்பிலிருந்து விருதுகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து தவெக நகர செயலாளர்கள் கார்த்திகேயன், சதீஷ்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.