

செங்கல்பட்டு: “தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. அதை ஆதரிப்பவர்கள் ‘எட்டப்பர்’கள்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர், மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக தொகுதி மறுவரையறை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். அதோடு, தமிழக மக்களிடமிருந்து அதிகாரத்தை பறித்துவிடும்.
நடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையை ஒவ்வொரு மாநில, தேசிய கட்சியும் தோற்கடிக்க வேண்டும். தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் ‘எட்டப்பர்’கள். மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை இது” என்றார்.