

சென்னை: போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் சின்னத் திரை துணை நடிகை சுபாஷினி, கணவருடன் வீடியோ காலில் பேசியபடியே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் சுபாஷினி என்ற சாஸ்வி பாலா (36). இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிபின் சந்திரன் (38) என்பவரை கடந்த 2024 ஏப்ரலில் திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வந்தார்.
இவர் சின்னத் திரை தொடர்களில் நடிப்பதற்காக சென்னை வரும்போது தங்குவதற்காக, சென்னை, போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். சின்னத் திரை தொடரில் நடிப்பதற்காக சென்னை வரும்போது இந்த வீட்டில் சுபாஷினி தங்குவது வழக்கம்.
அந்த வகையில், சின்னத் திரை தொடரில் நடிப்பதற்காக கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் இருந்து அய்யப்பன்தாங்கல் வீட்டுக்கு வந்த சுபாஷினி, நேற்று நள்ளிரவில் கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சுபாஷினி தனது கணவர் பிபின் சந்திரனுடன் வீடியோ காலில் பேசியபடியே வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சியடைந்த பிபின் சந்திரன், அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, காவலாளி, சுபாஷினி தற்கொலை குறித்து எஸ்ஆர்எம்சி (போரூர்) போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த எஸ்ஆர்எம்சி போலீஸார், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுபாஷினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிபின் சந்திரனிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில், சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.