

கைதான 3 ரோசஸ் பெண்கள் மீனாட்சி, குஷ்பு, லட்சுமி
புதுச்சேரி / சென்னை: தென்னிந்திய அளவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘3 ரோசஸ் பெண்கள்’ கும்பல் புதுச்சேரியில் சிக்கியது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில கவனத்தை திருப்பி திருடுவதில் இந்தப் பெண்கள் கைதேர்ந்தவர்கள்.
இதனால், இவர்களுக்கு ‘3 ரோசஸ் பெண்கள் திருட்டுக் கும்பல்’ என்று போலீஸார் பெயர் வைத்தனர். குறிப்பாக இவர்கள் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் அதிக அளவில் கைவரிசை காட்டி வந்தனர். போலீஸார் இவர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் சென்னை தி.நகரில் கைவரிசை காட்டிவிட்டு தப்பினர். இவர்கள் புதுச்சேரி பகுதியில் சுற்றுவதாக தகவல் வந்தது. அந்தப் பெண்களின் படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக மற்றும் ஆந்திர போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இவர்கள் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் துணிக்கடைக்குள் போலீஸார் நுழைந்து, அவர்களை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்சி, லட்சுமி என்பது தெரியவந்தது. பின்பு அவர்களை பெரியகடை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். தகவல் அறிந்து சென்ற மாம்பலம் போலீஸார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இந்த பெண்கள் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
சென்னை தரமணியைச் சேர்ந்த ஷாலினி பிரியாவிடம் 4 பவுன் நகை, சித்தாலப்பாக்கத்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த நடராசா கிருபானந்தனின் ரூ.75 ஆயிரம் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை இந்த கும்பல் திருடியதை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு உறுதி செய்தோம்.
இந்தநிலையில்தான் புதுச்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டது தெரிந்தது. அவர்களை சென்னை அழைத்து வந்து, அவர்களிடம் ரூ.6 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தோம்.
திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு, அந்த பணத்தில் சொந்த மாநிலத்தில் வீடு, கார், நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியுள்ளனர். இவர்கள் மீது மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கூறினர்.