கோவை, சூலூர் பகுதியில் 3 பேர் கொலை - காவல் துறை விசாரணை

கோவை, சூலூர் பகுதியில் 3 பேர் கொலை - காவல் துறை விசாரணை
Updated on
1 min read

கோவை: திருச்சியைச் சேர்ந்தவர் தேவதாசன் (35). இவர், சூலூர் அருகே காரணம்பேட்டையில் தங்கி பச்சை குத்தும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அசோக் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

தேவதாசன் ராமச்சியாம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் நொய்யலாறு அருகே நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரஞ்சித், அசோக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. ரஞ்சித், அசோக் சேர்ந்து கத்தியால் தேவதாசனை சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். சுல்தான்பேட்டை அருகே உள்ள செலக்கரிசல் காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). ஓட்டுநர்.

இவரது வீட்டருகே கண்ணன் (35) என்பவர் வசித்து வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அங்கு சென்ற செந்தில்குமார், கண்ணனை கண்டித்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் அங்கிருந்த கட்டையை எடுத்து, செந்தில்குமாரின் தலையில் தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்தார். தகவலறிந்த சுல்தான்பேட்டை போலீஸார் கொலை வழக்குப்பதிந்து கண்ணனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சிங்காநல்லூர் அரவான் கோயில் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56). பத்திரப்பதிவு எழுத்தர். இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

வேலுச்சாமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்த சிங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், சொத்து தகராறு காரணமாக வேலுச்சாமியை அவருடைய தம்பி முறை உறவினரான அதே பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவக்குமார் (50), கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சிவாவை, தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை, சூலூர் பகுதியில் 3 பேர் கொலை - காவல் துறை விசாரணை
சென்னையில் 8 நாட்களில் 22,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in