

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கடந்த ஆக.29-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மனும் கைது செய்யப்பட்டனர். பின்னர் குண்டர் சட்டத்தில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீரமணியின் நிறுவனத்தில் பணியாற்றிய அவரது உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு கடந்த 2-ம் தேதி பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
தொடர் விசாரணையில், வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்துக்காக, அவரது கார் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். வீரமணியிடம் லாசர் 23 ஆண்டுகளும், பாபு, பார்த்திபன் 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளனர். அவர்களது வீடுகளில் நடத்திய சோதனையில், 8 செல்போன், 55 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.