

சென்னை: பெரியமேட்டில் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் ரவுடியின் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச வந்த கும்பல், தவறுதலாக அருகில் இருந்த மூதாட்டியின் வீட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலை 4-வது தெருவில் வசித்து வருபவர் கலைவாணி (60). அவரது வீட்டின் கீழ்தளத்தில் சதக்கத்துல்லா (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், கலைவாணி வீட்டை நோக்கி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
அதில் ஒரு பெட்ரோல் குண்டு வீட்டின் வாசலில் விழுந்து வெடித்து சிதறியது. மற்றொரு குண்டும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
சம்பவ இடத்தில் கிடந்த பெட்ரோல் குண்டுகளின் சிதைவுகளை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டு பெரியமேடு பகுதியில் டைசன் ரவுடி கும்பலைச் சேர்ந்த பிரேம் என்பவர், எதிர் கும்பலைச் சேர்ந்த விஜயநாராயணன் தலைமையிலான கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் விஜயநாராயணன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் டைசன் கும்பலைச் சேர்ந்தவர்கள், விஜயநாராயணனின் சகோதரி வசிக்கும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசச் சென்றனர். ஆனால், இரவு நேரத்தில் வீடு களை சரியாக அடையாளம் காண முடியாததால், சகோதரி வீட்டுக்கு பதிலாக அருகில் இருந்த கலைவாணியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி சங்கர் உட்பட 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.