

தமிழரசன்
திருநெல்வேலி: கஞ்சா கடத்தலுடன் தொடர்பு வைத்து, தொடர் கடத்தலில் ஈடுபட்டு வந்த சிறை வார்டனை 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 10 லட்சம் பணத்துடன் போலீஸார் கைது செய்தனர்.
திருநேல்வேலி டவுன் - குற்றாலம் சாலையில், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த 2 பேரையும் விசாரித்தபோது, அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், முறப்பநாடு நவீன் என்பதும் அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி பொட்டலங்களாக பிரித்து விற்பதும் தெரியவந்தது. தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டனாக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
தமிழரசன் இதற்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றியபோது, அவருக்கு பிரபல கஞ்சா வியாபாரியான எஸ்டேட் மணி என்பவரின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தினேஷ் விடுதலையான பின்னர், அவருடன் சேர்ந்து தமிழரசன் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் தினேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் எஸ்டேட் மணியும் கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே நேற்று முன்தினம் வாகன சோதனை நடந்தாகவும், அப்போது கஞ்சாமற்றும் பணத்துடன் சிறை வார்டன் தமிழரசன் சிக்கியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கைதான வார்டன் தமிழரசனை சஸ்பெண்ட் செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழரசனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.