

கீதா, சரண்யா, சரண்ராஜ்
ராணிப்பேட்டை: வாலாஜா அருகே பெற்ற தாயை கொலை செய்த பள்ளி ஆசிரியையை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (61), கார் ஓட்டுநர். இவரது மனைவி கீதா (54). தம்பதிக்கு சரண்யா (34), சுகன்யா (32) என 2 மகள்கள் உள்ளனர். கீதா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கீதாவின் மூத்த மகளான சரண்யா, வாலாஜாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கணவரை இழந்து 2 மகன்களுடன் தாய் கீதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 19-ம் தேதி கீதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையும், வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மகள் சரண்யாவை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “கீதாவின் மூத்த மகளான சரண்யா ஏற்கெனவே மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், கீதாவுக்கு உடன்பாடு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவின் கணவர் உயிரிழந்தது விட்டார். இதன் காரணமாக சரண்யா தனது 2 மகன்களுடன், தனது தாய் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்.
இதற்கிடையே சரண்யா அப்பகுதியில் வேறொரு நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததும், தற்போது வேறொரு நபருடன் பழகி வருவது குறித்து, கீதா தனது மகள் சரண்யாவை அடிக்கடி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி தாய் மற்றும் மகளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சரண்யா தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், மர்ம நபர்களால் பணம் மற்றும் நகைக்காக திருட்டு நடைபெற்றது போல் தெரிய, கீதாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து மறைத்து வைத்து விட்டு, வழக்கம் போல் பணிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது” எனறனர். இதனைத்தொடர்ந்து, வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரண்யாவையும் அவரது ஆண் நண்பர் சரண்ராஜ் (32). என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.