

பிரதீப்ராஜ்
சென்னை: திருவொற்றியூரில் சினிமா துணை நடிகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் மேற்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்ராஜ் (30). சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். சினிமாவில் துணை நடிகராகவும் இருந்தார்.
இவரது தாய் டில்லிராணி, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் வட்டிக்கு ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்தப் பணத்தை தனக்கு தெரிந்த சிலருக்கு வட்டிக்கு கொடுத்த நிலையில், அவர்கள் பணத்தை திருப்பி செலுத்தாததால் டில்லிராணியால் நவநீதத்திடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நவநீதம், தான் கொடுத்த கடனுக்கு அதிக வட்டிகேட்டு டில்லிராணியை மிரட்டினாராம். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நவநீதம் அடியாட்கள் மூலம் மிரட்டியதாக, பிரதீப்ராஜ் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் விசாரித்தனர். இந்த சூழலில், பிரதீப்ராஜ் குடும்பத்தினர் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நவநீதம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பிரதீப்ராஜ் மற்றும் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரதீப்ராஜ் திருவொற்றியூர் மேற்கு மாடவீதி வழியாக பைக்கில் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக நவநீதத்தின் மகன் நவீன் (32), அவரது கூட்டாளிகள் ஹரிகிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை திருவொற்றியூர் போலீஸார் கைது செய்தனர்.
கொலையின் பின்னணி
டில்லிராணி, நவநீதத்திடம் வாங்கிய கடனை விட அதிகளவில் வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், கடனுக்காக அடமானமாக பெற்ற ஆவணங்களை நவநீதம் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நவீன், ஹரிகிருஷ்ணன், லோகேஷ், ஜாபர்
இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதீப்ராஜ், வழக்கறிஞர்களுடன் திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று, நவநீதம் தரப்பினர் தன்னை கொலை செய்ய வாய்ப்புள்ளதாக கூறி புகார் அளித்தார். இதற்கு மறுநாளே எதிர் தரப்பினர் அவரை கொலை செய்துள்ளனர்.
நவீன் வாக்குமூலம்
கைதான நவீன், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “எனது தாய் நவநீதம் டிபன் கடை நடத்தும் இடத்துக்கு அருகே, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதீப்ராஜும் அவரது நண்பர்களும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். இதனால் கடையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்களுடன் எங்களுக்கு ஏற்கெனவே விரோதம் இருந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினர். அப்போது பிரதீப்ராஜ் எங்களை சும்மா விடமாட்டேன் என எச்சரித்தார்.
எங்கள் உறவினர் ஒருவர் ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் அளித்தார். மேலும், பிரதீப்ராஜின் தாயாரும் பண விவகாரத்தில் எங்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். போலீஸார் முன்னிலையில் ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாததால் பிரதீப்ராஜை தீர்த்துக்கட்டினோம்” என்று கூறியதாக தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட பிரதீப்ராஜ் 10-வது வார்டு திமுக பாக முகவராக இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட நாராயணன் என்ற நவீன், திமுக 10-வது வார்டு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.