சங்கரன்கோவில் வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்

சங்கரன்கோவில் வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
Updated on
1 min read

தென்காசி: சங்கரன்கோவில் இந்தியன் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே வணிக வளாக கட்டிடத்தின் முதல் மாடியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வங்கி மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் இந்த வங்கியில் தீப்பிடித்து, ஜன்னல்கள் வழியாக புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸாரும், சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்றனர்.

பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள கணினிகள், முக்கிய ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தீயின் வெப்பத்தால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது. சேதங்கள் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “தீ விபத்து ஏற்பட்ட இந்தியன் வங்கி வணிக வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளது. இங்கு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக்கூட போதிய இட வசதி இல்லை. வங்கி வேலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் பகுதியில் பல வங்கிகள் முதல் மாடியில் இயங்குகின்றன. வங்கிகளுக்கு பல்வேறு தேவை காரணமாக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே, முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தரை தளத்தில் வங்கிகளை அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்வதற்கு போதுமான இட வசதி உள்ள பகுதிகளில் வங்கிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

சங்கரன்கோவில் வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
“என் வாழ்வின் திருப்புமுனை...” - புவனேஸ்வரி பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in