குன்றத்தூர்: காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

காலில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி தமிழழகு மற்றும் அவரது கூட்டாளி சூர்யா.

காலில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி தமிழழகு மற்றும் அவரது கூட்டாளி சூர்யா.

Updated on
1 min read

குன்றத்தூர்: குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய நடவடிக்கையின்போது, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு ரவுடி கருப்பு என்கிற தமிழழகு (28) போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பிடிபட்டார். அவருடன் இருந்த நண்பர் ஆகாஷ் என்கிற சூர்யா (24) என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த தமிழழகு மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, தாக்குதல், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா மீது பெரணமல்லூர் மற்றும் தாம்பரம் காவல் எல்லைகளில் 6 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு மீறல், போதைப்பொருள் தடுப்புச் சட்டம், கொலை முயற்சி, கொலை மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெடிகுண்டுகள் தயாரிப்பு

இருவரும் காவனூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவர்களை போலீஸார் அழைத்துச் சென்று ஆயுதங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழழகு திடீரென தலைமைக் காவலர் விஜயகுமாரின் வலது கையில் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் முத்துக்குமார் துப்பாக்கியால் தமிழழகின் வலது கணுக்காலில் சுட்டுப் பிடித்தார். தப்பியோட முயன்ற சூர்யாவையும் போலீஸார் பிடித்தனர்.

தமிழழகுவிடமிருந்து இரண்டு கத்திகள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்து கலவை, சணல், நூல், தவிடு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த தமிழழகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், தலைமைக் காவலர் விஜயகுமார் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். சம்பவம் தொடர்பாக திருமுடிவாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>காலில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி தமிழழகு மற்றும் அவரது கூட்டாளி சூர்யா.</p></div>
சோழிங்கநல்லூர் மேம்பாலத்தில் சென்ற மாநகரப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in