

சென்னை: திருடப்பட்ட பைக்கை திரும்ப ஒப்படைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்ஐ மற்றும் காவலரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவரது பைக் திருடுபோனது. அவர் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
ஆனால், பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அண்மையில் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பூரில் காணாமல் போன இளைஞரின் பைக்பிடிபட்டது.
அந்த வாகனத்தை திருடி வந்த நபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். இதையடுத்து, வடக்கு கடற்கரை காவல் நிலைய காவலர் விவேக், பைக் உரிமையாளரை தொடர்பு கொண்டு அவரது பைக் சென்னையில் மீட்கப்பட்ட தகவலை தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, அவர் கடந்த 28-ம் தேதி வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்ஐ சிவராஜ் மற்றும் காவலர் விவேக் ஆகியோர், பைக்கை விடுவிக்கபைக் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.
அவர் வேறு வழியின்றி ஜிபே மூலம் அவர்கள் கேட்ட பணத்தை அனுப் பினார். இதையடுத்து, பைக் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸார் லஞ்சம் பெற்றதால் வேதனை அடைந்த பைக் உரிமையாளர், சென்னை காவல் துறையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள உள் கண்காணிப்பு பிரிவு என கூறப்படும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் (78717- 23000) புகார் தெரிவித்தார்.
அப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், போலீஸார் இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து, எஸ்ஐ சிவராஜ் மற்றும் காவலர்விவேக் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். மேலும் ஒரு எஸ்ஐ சஸ்பெண்ட் இதேபோல், ஜிபேயில் லஞ்சம் வாங்கியதாக மாதவரத்தில் மேலும் ஒரு எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.