

இடது: மாணவர்கள் போராட்டம் | வலது: பேராசிரியர் ஞானவேல் பாபு
சென்னை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, பேராசிரியர் ஞானவேல் பாபுவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரடியாக சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகிறேன். ‘எனது குடும்பம் ஏழ்மையானது. எனக்கு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி செய்து வரும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஞானவேல் பாபுவின் (50) அறிமுகம் வேறு ஒருவர் மூலம் கிடைத்தது.
படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவு எனக்குள் இருந்தது. ஆனால், போதிய வழிகாட்டல் இல்லை. இதை அறிந்த பேராசிரியர் ஞானவேல் பாபு எனக்கு உதவுவதாக நம்பிக்கை அளித்தார். பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். கல்வி உதவித்தொகை பெற உதவினார். இதனால், அவர் மீது எனக்கு நன்மதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல அவரது அணுகுமுறை மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. எனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டார். இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசத் தொடங்கினார். மேலும், ஆபாசமான வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் தொடர்ந்து அனுப்பினார்.
இதையடுத்து, நான் படிப்படியாக விலகினேன். நான் கண்டித்தும் கேட்காமல் 3 ஆண்டாக தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகாரில் மாணவி தெரிவித்திருந்ததாக போலீஸார் கூறினர்.
இது குறித்து, உரிய விசாரணை நடத்த, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, வழக்குப் பதிந்து, அவர் வசித்து வந்த கோட்டூர்புரம் குடியிருப்புக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தலைமறைவானார். இதையடுத்து, தனிப்படை அமைத்து போலீஸார் தேடினர்.
இந்நிலையில், அவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிந்தது. பின்னர் அங்குள்ள போலீஸார் உதவியுடன் ஞானவேல் பாபுவை இன்று தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
முன்னதாக, ஞானவேல் பாபுவை கைது செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பேராசிரியர் ஞானவேல் பாபுவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, அவர் மீது மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.