

உள்படம்: உயிரிழந்த எஸ்எஸ்ஐ செந்தில்குமார்
தேனி: நேற்றிரவு பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சப்தத்தில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களை காவல் துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) செந்தில்குமார் கண்டித்தார். மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் கோபத்தில் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (55). நேற்று தீபாவளி தினத்தில் பணி முடித்துவிட்டு இரவு 10.30 மணிக்கு அல்லிநகரம் காந்திநகரில் உள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சமதர்மபுரம் மெயின் பஜாரில் மது போதையில் சில இளைஞர்கள் நடுரோட்டில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தொடர்ந்து வெடித்து, அதனை ரீல்ஸ்களாக எடுத்து கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
தொந்தரவு செய்யும் வகையில் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அப்போது அங்கு வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களை கண்டித்தார்.
ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்து நடுரோட்டில் வைத்து பட்டாசுகளை வெடிக்கிறீர்கள்? அரசு நிர்ணயித்த நேரம் முடிந்துவிட்டது, கூச்சல் குழப்பம் செய்யாமல் இங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்ததுடன் மீண்டும் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
இதனை தொடர்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனது செல்போனில் அங்கு நடந்த நிகழ்வை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அனைவரும் சூழ்ந்து நின்று அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் செந்தில்குமார் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரைக் கைது செய்து தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் அப்பகுதியில் ஆய்வு செய்தார். சிறப்பு சார்பு ஆய்வாளவரை மதுபோதையில் இளைஞர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.