

இந்தியப் பெருங்கடலில் போதைப் பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகு.
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் 255 கிலோ போதைப் பொருள் கடத்திய 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ள பெருவேளையிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்கிடமாகச் சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகை இலங்கை கடற்படையினர் கண்டறிந்து ரோந்து கப்பல் மூலம் சுற்றி வளைத்தனர்.
சோதனையில் படகில் 255 கிலோ போதைப்பொருள் சிக்கியது. மேலும் படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
பறிமுதல் செய்த போதைப் பொருளும், படகும் திக்கோவிட்ட கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்தப் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, கடத்தலில் தொடர்புடையோர் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடற்படையின் மேற்குப் பகுதி தளபதிரியர் அட்மிரல் ஜகத் குமார செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை கடற்படை தனது கடல்சார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 7 முக்கிய கடத்தல் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றிருந்து இலங்கை மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான (இந்திய மதிப்பில் ரூ. 600 கோடி) போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.