

விருதுநகர்: விருதுநகரில் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்க இளைஞர்கள் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு பகுதியில் 11 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரயில் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட அரசால் தடை விதிக்கப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார் தொடர்ந்து ரயில்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் விரைவு ரயிலில் பின்னால் உள்ள பொதுப் பெட்டியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 2 கருப்பு நிற பைகளில் 14 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேற்கு வங்கம் முர்ஸிதாபாத், பாம்நாபாத் பகுதியைச் சேர்ந்த சுபாஷ்குமார் மாண்டல் (28), ராணா மண்டல் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 14 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், நாகர்கோவில் நோக்கிச் செல்லும் ஹவுரா விரைவு ரயிலில் பின்னால் உள்ள பொதுப் பெட்டியில் போலீஸார் சோதனையிட்டபோது சாக்குப் பையில் 11 கிலோ குட்கா பொருள்கள் இருந்ததையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருள்களை கடத்தி வந்தது யார் என்பது குறித்தும் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.