

கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இந்தியர்கள் யாரும் வேலை தேட வேண்டாம் எனவும் இந்த விவகாரத்தில் போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசிய அரசு வழங்கும் 30 நாட்கள் சுற்றுலா விசாவில் அங்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மலேசியா வழங்கும் 30 நாட்கள் சலுகையானது சுற்றுலா மற்றும் உறவினர்களை சந்திப்பது போன்ற சமூக வருகைக்கு மட்டுமே உரித்தானது. இதன் மூலம் வேலை தேட அனுமதி இல்லை.
சுற்றுலா விசாவில் இங்கு வேலை செய்வது குடிவரவு விதிகளை மீறும் செயலாகும். இதனால் இந்தியர்கள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்கள் வேலை தேடலில் ஈடுபட வேண்டாம். நேர்மையற்ற முகவர்களின் போலி வேலை வாக்குறுதிகளை
நம்பி இந்தியர்கள் ஏமாறுவதால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான காலம் தங்கும் நிலை ஏற்படுகிறது. இது, சட்டவிரோதமாக தங்கும் நிலை, சுரண்டல், கைது நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகளை சந்திக்க காரணமாகி விடுகிறது.
எனவே, மலேசியாவுக்கு வரும்போது குடிவரவு தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, உண்மையான சுற்றுலாப் பயணிகள் முறையான ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும். மலேசியாவுக்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட ‘மலேசிய டிஜிட்டல் வருகை அட்டை’, குறைந்தபட்சம் 6 மாதம் செல்லும் பாஸ்போர்ட் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
முறையான பணி அனுமதிச் சீட்டு அல்லது உரிய விசா இல்லாமல் வேலைக்காக மலேசியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்தியக் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தூதரகம் தெரிவித்துள்ளது.