

சென்னை: கடனாகக் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டதால், பழ வியாபாரியை கொலை செய்த இளம் பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி வேலு. இவரிடம், பம்மலைச் சேர்ந்த கலா என்பவர் ரூ. 10 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் கலா இழுத்தடித்து வந்துள்ளார்.
இதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த 2013 மே 29 அன்று தனது கடைக்கு வந்த கலாவிடம், கடனை திருப்பித் தரும்படி கோரியுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறிது நேரத்தில் அங்கு வந்த கலாவின் ஆதரவாளர்கள் வேலுவை கத்தியால் சரமாரியாககுத்தியும், வெட்டியும் கொலை செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே வேலு இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பெரியமேடு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, பம்மல் கலா (43), அயனாவரம் வாணி (26), ஓட்டேரி அருண் (25), சதீஷ் (29), ஜெய் (24), சாஸ்திரி நகரைச் சேர்ந்த முகமது மசூத்(24), கொடுங்கையூர் சந்தோஷ் குமார் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன்பாக நடந்து வந்தது. போலீஸார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகரன், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவ இடத்தில் வாணி இல்லை என்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தும், கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட ஆத்திரத்தில் கலாவின் தூண்டுதலின் பேரில் பழ வியாபாரி வேலுவை கொலை செய்த அருண், சதீஷ், ஜெய், முகமது மசூத், சந்தோஷ்குமார், கலா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.