

அசோக், மணிமாறன்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன்-முருகேஸ்வரி தம்பதி மகள் சோலைராணி (19). சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சோலைராணி, ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்ததை கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால், கடந்த 20-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி முதல்வர் அசோக், அலுவலக உதவியாளர் மணிமாறன் ஆகியோர்தான் காரணம் என்று மாணவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், கல்லூரி முதல்வரை கைது செய்யக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி முதல்வர் அசோக்கை நேற்று முன்தினம் இரவு கைது செய்த சிவகாசி நகர் போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் அலுவலக உதவியாளர் மணிமாறனை போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், முதல்வர், அலுவலக உதவியாளர் கைது நடவடிக்கை ஆசிரியர், பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.