

சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமான தகர ஷெட். (உள்படம்) உயிரிழந்த இன்னாசிமுத்து. ராம் பிரகாஷ்.
சிவகாசி: சிவகாசி அருகே விவசாய நிலத்தில் தகர ஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவீந்திரனின் மகன்கள் ராமச்சந்திரன் (39), ராம்பிரகாஷ் (30) ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலம் நாரணாபுரம் சாலையில் உள்ளது. இந்நிலத்தில் உள்ள கிணறு அருகே தகர ஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இங்கு நேற்று காலை 8.15 மணியளவில் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த மூலப்பொருட்கள் மட்டுமின்றி ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த வெடிகளும் வெடித்துச் சிதறின.
தகர ஷெட் தரைமட்மானது. அதன் அருகே இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியிலிருந்த 3 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. வெடி விபத்தின் அதிர்வு, அப்பகுதியில் 10 கிமீ சுற்றளவு வரை உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராம்பிரகாஷ், மீனம்பட்டியைச் சேர்ந்த இன்னாசிமுத்து (45) ஆகியோர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
விபத்து நடந்தபோது அனைவருக்கும் கடையிலிருந்து டீ வாங்கிக் கொண்டு வந்த ராமச்சந்திரன், ஷெட்டின் அருகே தனது பைக்கை நிறுத்திக்கொண்டிருந்தார். அப்போது அவரது உடலில் தீப்பிடித்தது. இதில், அவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்பு அப்பகுதியின் பல இடங்களில் சிதறிக் கிடந்த ராம்பிரகாஷ், இன்னாசி முத்து ஆகியோரின் உடல் பாகங்களை சேகரித்தனர். படுகாயமடைந்த ராமச்சந்திரன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த சிவகாசி சார்ஆட்சியர் முகமதுஇர்ஃபான் பாதிப்புகளை ஆய்வு செய்தார். இந்த விபத்து குறித்துசிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் மாயம்? - பட்டாசு தயாரிப்பின்போது ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து ஆகியோருடன் அய்யப்பராஜ், பாண்டிதுரை ஆகியோரும் இருந்ததாக அவர்களது உறவினர்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்தனர். எனினும், வெடி விபத்தில் ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து ஆகியோர் உயிரிழந்ததை மட்டுமே போலீஸாரால் நேற்று உறுதிப்படுத்த முடிந்தது. மற்ற இருவரும் மாயமானதாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த இன்னாசிமுத்துவின் சகோதரர் அய்யப்பராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், விபத்து நடந்த தகர ஷெட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்ததால் அய்யப்பராஜ், பாண்டிதுரை ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதையடுத்து உறவினர்கள் அளித்த தகவலின்பேரில் மாயமானதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.