

கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி தங்கத்தைக் கைப்பற்றினார்.
போட்டியின் ஸ்னாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 82 கிலோவை உயர்த்தத் தவறினாலும், இரண்டாவது முயற்சியில் அதைச் சிறப்பாக தூக்கினார். தொடர்ந்து மூன்றாவது முயற்சியில் 85 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் சாதனையை முறியடித்தார்.
அதனைத் தொடர்ந்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது முயற்சியில் 105 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கி மீண்டும் புதிய சாதனை படைத்தார்.
ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையைத் தூக்கிப் புதிய காமன்வெல்த் சாதனையை படைத்த மீராபாய் சானு, நைஜீரியாவின் ரூத் அஸுகோ நயோங் (168 கிலோ) மற்றும் மலேசியாவின் ஐரீன் ஜேன் ஹென்றி (167 கிலோ) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். 2018 கோல்ட் கோஸ்ட் மற்றும் 2022 பர்மிங்ஹாம் தொடர்களைத் தொடர்ந்து, காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானு வெல்லும் தொடர்ச்சியான 3-வது தங்கப் பதக்கம் இது.
இந்தப் போட்டியின் மூலம் 2026 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் பதக்கக் கணக்கில் முதல் தங்கம் இணைந்துள்ளது. முன்னதாக, ஆடவர் பளுதூக்குதலில் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கமும், பாரா பவர்லிஃப்டிங்கில் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்த நிலையில், மீராபாய் சானுவின் இந்த வெற்றி பாராட்டுகளை பெற்று வருகிறது.