செங்கல்பட்டு: ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி தலைமையகத்தில் வட மாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் டிஎஸ்பியிடம் விசாரணை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி அளித்து வந்த டிஎஸ்பி வசந்தன் என்பவர் அதே வளாகத்தில் உள்ள உணவுக் கூடத்தில் பணியாற்றி வந்த 16 வயது வட மாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிளாம்பாக்கம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் ஆணையரக துணை ஆணையர் கார்த்திகேயன், குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஎஸ்பியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், காவல்துறை உயர் பயிற்சியக வளாகத்துக்கு உள்ளேயே சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டங்களுக்கு மாறாகவும் 16 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியது யார், இதன் பின்னணியில் உள்ள அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் யார் என்ற பல்வேறு கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.
ஆட்சியரின் உதவியாளர் கைது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருப்பவர் பிரம்மநாயகம். மதுரவாயல் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி வந்த இவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, மதுரவாயல் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிரம்மநாயகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.