

கோவளம்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மாணவியர் விடுதி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள விடுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சேர்க்கப்பட்டிருந்தார். அவரும் விடுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகளும் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.
மாணவியின் தந்தை பிரிந்து சென்று விட்டதால் மாணவியின் தாயார் மட்டும் மாதம் ஒருமுறை வந்து மகளை பார்த்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தன்னைப் பார்க்க தாய் வந்தபோது விடுதியில் இருக்கும் சமையலர் தன்னிடமும், சக மாணவிகளிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் நடத்திய விசாரணையில் சமையலர் மாணவிகளிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று காலை கேளம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி வழக்குப் பதிவு செய்து விடுதி சமையலரான விழுப்புரம் மாவட்டம், காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணனை (44) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.