

சென்னை: அந்தரங்க வீடியோவை வெளியிட்டுவிடுவதாக தொழில் அதிபர் மனைவியை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை பறித்த வழக்கில் தாய், மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது தொழில் அதிபர் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் கடந்த ஆண்டு சங்கீதா (53) என்பவர் தனது மகன்கள் திலீப் (34), அங்கீத் (31) ஆகியோருடன் வாடகைக்கு குடியேறினார்.
பின்னர் தொழிலதிபர் மனைவி தனியாக இருக்கும்போது அவரது வீட்டுக்கு சங்கீதா அடிக்கடி சென்று பேசிப் பழகினார். இருவரும் நண்பர்களான நிலையில், தொழிலதிபரின் மனைவியும் அடிக்கடி சங்கீதா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது திலீப்புடன் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமாகியுள்ளது.
இருவரும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தொழிலுக்கு வருமான வரி செலுத்த வேண்டும், செலவுக்கு பணம் தேவை என பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்.
இதை உண்மையென நம்பி தொழில் அதிபர் மனைவி வீட்டிலிருந்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சுமார் 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் வைர நகைகள் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்களை சிறிது சிறிதாக கொடுத்துள்ளார்.
மேலும் திலீப் பணம் கேட்டபோது, ‘அப்பெண் மொத்த நகைகளையும் கொடுத்து விட்டேன். தன்னிடம் இல்லை’ என கூறியுள்ளார். அப்போது திலீப், ‘பணம் தரவில்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெண் இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையறிந்த திலீப் தலைமறைவானார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக திலீப்பின் தாய் சங்கீதா, சகோதரர் அங்கீத் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இதே பாணியில் பல்வேறு இடங்களில் நகை, பணத்தை பறித்தது தெரியவந்ததாக போலீஸார் கூறினர். தலைமறைவாக உள்ள திலீப்பை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.