

கோப்புப் படம்
சென்னை: சென்னையில் உள்ள 16 தொகுதி வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களான ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறுவதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அவர்களின் பணிகள் தொடர்பான செயல்முறை பயிற்சி வகுப்பு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் க.கற்பகம் தலைமையில் நேற்று நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.
மேலும் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தபால் வாக்குகள் தனியாக தலா 4 மேசைகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலா 14 மேசைகளிலும் எண்ணப்படும்.
இதில் ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு 18 சுற்றுகளாகவும், திரு.வி.க. நகர் - 17, ராயபுரம் - 14, துறைமுகம் -14, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி -17 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும்.
லயோலா கல்லூரி மையத்தில் பெரம்பூர் - 22 சுற்றுகளாகவும், கொளத்தூர்- 21, வில்லிவாக்கம்- 19, எழும்பூர் -15, ஆயிரம் விளக்கு -18, அண்ணாநகர்- 20 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும்.
அண்ணா பல்கலைக்கழக மையத்தில் விருகம்பாக்கம் -23, சைதாப்பேட்டை- 21, தியாகராயநகர்-18, மயிலாப்பூர்--20, வேளச்சேரி- 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.