

சென்னை: ரஜினியின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நூதன மோசடியில் சிலர் ஈடுபடுவதாக கமல்ஹாசனின் உதவியாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் உதவியாளர் முரளி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில், ‘தர்மன்’ படத்தின் பெயரைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர்.
தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘தர்மன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க, ‘நடிகர் அட்டை’ பெற வேண்டும் எனக் கூறி, அதற்காக ரூ. 12,500-ஐ முன்பணமாகக் கேட்டுப் பெற்றுள்ளனர். இந்த வாய்ப்பைப் பெறுபவர்களுக்கு ரூ.18.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நூதன முறையில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனவே, இந்த மோசடி கும்பல் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என முரளி தனது புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தற்போது தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இணையத்தில் போலி விளம்பரங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.