

ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.23.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக, ஆந்திராவை சேர்ந்த 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டிபஜார் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காரை சோதனை செய்தபோது, உள்ளே கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
காரில் இருந்த ரூ.23.50 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, காரையும், பணத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த 6 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, நிதி நிறுவன உரிமையாளர் வெங்கடநாகா, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி தொழிலதிபர் பத்ம சுப்பையா, ஊழியர்கள் அஸ்வின் குமார், கணேஷ், கண்ணா மகேஷ் மற்றும் சந்தீப் வர்மா என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், வரும் வழியில் சிலுக்கூர் பேட்டையில் சீனு என்பவரிடம் மிளகாய் விற்ற தொகையான ரூ.23.50 லட்சத்தை வாங்கிக்கொண்டு சென்னை வந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.