

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக கூறி, முதியவரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, நொளம்பூர், ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர ராஜன் (70). இவர், கடந்த நவ.22-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ‘நான் சமூக வலைதளத்தில் கடந்த ஆக.20-ம் தேதி விளம்பரம் ஒன்றை பார்த்தேன்.
அந்த விளம்பரத்தில், ஆன்லைன் வழியாக, ஸ்டாக் மார்க்கெட்டில் பண முதலீடு செய்து, ஸ்டாக்குகளை வாங்கி குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து, அந்த விளம்பரத்துக்கு கீழ் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு, வாட்ஸ் அப் குழுவில் இணைந்தேன்.
அந்தக் குழுவில், 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அந்தக் குழுவில் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் பேரில், செப்.30-ம் தேதி முதல் அக்.22-ம் தேதி வரை 6 தவணைகளாக, அந்தக் குழுவில் குறிப்பிட்டிருந்த நிறுவனத்தில் ரூ.12 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால், அதன்பிறகு, எனக்கு எந்த ஒரு லாப தொகையும், நான் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் அடிப்படையில், சென்னை, வடபழனியை சேர்ந்த வளவன் (49), சாலிகிராமத்தை சேர்ந்த பெண் சுமி (43), கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக்கேயன் (29) ஆகிய 3 பேரையும் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், ‘வளவன் மற்றும் சுமி ஆகியோர் அறப்பணி ஆன்மிக அறக்கட்டளை என்ற பெயரில் பல வங்கிகளில் கணக்குகளை தொடங்கி, நன்கொடைகள் மற்றும் நிதிகளை வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்காக திட்டமிட்டு வந்துள்ளனர்.
அதே சமயம், சைபர் கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, சைபர் மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, இவர்கள் சைபர் கும்பலிடம் இருந்து கமிஷன் தொகையும் பெற்றுள்ளனர். அதன்படி, சைபர் கும்பலை, ராஜஸ்தான், மும்பை போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று, ஹோட்டல்களில் தங்க வைத்து, பண பரிவத்தனைகள் செய்துள்ளனர்.
மேலும், விசாரணையில், இவர்கள் பயன்படுத்தி வந்த 3 வங்கி கணக்குகள் மீது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இணையதளத்தில் இதுவரை 133 புகார்கள் இந்தியா முழுவதும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல், கார்த்திக்கேயன் மீது வேப்பேரி, அம்பத்தூர், விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 3 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகிறோம்’, என்றனர்.