

சேலம்: மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்களுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையாக ரூ.15,000 வழங்கப்படும் என்பதை நம்பி ஆத்தூர் அருகே 3 பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரை, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி, தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால், அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும், மொட்டை அடித்துக் கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாது என்றும், அதனை ஊக்குவிக்கும் வகையில் மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்களுக்கு ரூ.6 ஆயிரமும் ஊக்கத் தொகையாக அரசு சார்பில் வழங்கப்படுவதாகவும் கூறியதுடன், மொட்டை அடித்துக் கொண்ட சில பெண்களது புகைப்படங்களையும் வாட்ஸ் அப்பில், அந்த மர்ம நபர் அனுப்பி உள்ளார்.
மேலும் உடனடியாக மொட்டை அடித்துக் கொண்டு புகைப்படத்தை அனுப்புபவர்களுக்கு, நேரில் வந்து ஊக்கத் தொகையை கொடுப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய அப்பாவி பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்துக் கொள்வதற்கு தயாராகினர். உடனடியாக 3 பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர், தாங்கள் மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோவை அனுப்புவதற்காக, அந்த நபரை தொடர்பு கொள்ள முற்பட்டபோது, அந்த செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அறிந்து அங்கு ஏற்கெனவே மொட்டை அடிக்க தயாராக காத்துக் கொண்டிருந்த பெண்கள் உஷாராகி, மொட்டை அடித்துக் கொள்ளாமல் அங்கிருந்து நழுவினர். தகவல் அறிந்து போலீஸார், அங்கு விசாரிக்க சென்றபோது மொட்டை அடித்துக் கொண்ட பெண்கள் எவரும் புகார் அளிக்க முன்வரவில்லை.
இதனிடையே மொட்டை அடித்துக் கொண்டால், அரசு ஊக்கத் தொகை கிடைக்கும் என்று நம்பி பெண்கள் மூன்று பேர் மொட்டை அடித்துக் கொண்ட தகவல் அப்பகுதியில் பரவி மக்களிடையே வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.