

ஊர்காவலன்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தன்னை தாக்க முயன்ற ரவுடியை, காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
சிவகங்கை அருகே மாத்தூரைச் சேர்ந்த ‘ஏ பிளஸ்’ சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஊர்காவலன் (31). தற்போது மிக்கேல்பட்டினத்தில் வசிக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள 3 வழக்குகளுக்காக ஊர்காவலனை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் திருப்பாச்சேத்தி அருகே கானூர் மயானப் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸார் ஊர்காவலனை கைது செய்ய முயன்றனர்.
ஆனால், அவர் காவல் ஆய்வாளரை ஆயதங்களால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எச்சரிக்கும் வகையில் ஆய்வாளர் துப்பாக்கியால் வானை நோக்கிச்சுட்டார். அப்போதும் ஊர்காவலன் தாக்க முயற்சித்ததால், ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் துப்பாக்கியால் சுட்டதில் ஊர்காவலனின் வலது காலில் குண்டு பாய்ந்தது.
காயமடைந்த அவருக்கு திருப்புவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.