

சென்னை: வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஓட்டேரி, எஸ்விஎம் நகரை சேர்ந்தவர் அஜய் (20).
ரவுடியான இவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரைச் சேர்ந்த கூட்டாளியான காஜல் (24) என்பவரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பைக்கில் தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அஜய்யை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
தகவல் அறிந்து, வண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து அஜய் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன, கொலையாளி யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிஉள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீஸார் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.