

சென்னை: வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி மகேந்திரன் (66). இவரை செல்போனில் அழைத்து பேசிய நபர் “ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும். இதற்கு தேவையான உதவிகளை செய்து தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மகேந்திரன் அந்த நபர் அறிவுறுத்திய பங்கில் முதலீடு செய்துள்ளார். அதன்படி அதிக லாபம் கிடைத்துள்ளது. அந்த லாப பணத்தை அவர் எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதுகுறித்து கேட்டபோது, மேலும் பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மகேந்திரன் பல்வேறு தவணைகளாக அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.1.23 கோடி செலுத்தியுள்ளார். ஆனால் அவர் செய்த முதலீடு, அதற்கான லாபம் எதுவும் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், அளித்த புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பண மோசடியில் ஈடுபட்டது ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (41) என்பது தெரியவந்தது.
இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகவும் பணி செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.