

மதுரை: திருமங்கலம் அருகே 4 வயது சிறுவனை கழுத்தறுத்து கொன்று உடலை குவாரி பள்ளத்தில் வீசிய கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை திருமங்கலம் அருகிலுள்ள பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (38). இவரது மனைவி நாச்சம்மாள். இத்தம்பதியருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் தம்பதியர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர். இரு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். மகன் மோகன் (4) மட்டும் காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்து முருகன், கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்பி தேவநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் சிறுவனை தேடினர்.
இந்நிலையில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த முருகனின் உறவினர் கிருஷ்ணன் மகன் முத்துமணி (18) இரவில் சாக்கு மூட்டை ஒன்றை தூக்கிக்கொண்டு சென்றதாக தகவல் தெரிந்தது.
இதையடுத்து வீட்டில் படுத்திருந்த முத்துமணியை பிடித்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, முதலில் மறுத்த அவர், பிறகு சிறுவனைக் கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி குவாரி பள்ளத்தில் வீசியதாக தெரிவித்தார். அவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றனர்.
அங்கு சிறுவன் கழுத்தறுத்து கொல்லப்பட்டு, உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை கைப்பற்றிய போலீஸார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக முத்துமணி மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “முருகனும், முத்துமணியும் உறவினர்கள். இரு குடும்பத்திற்கும் முன்பகை இருப்பதாக தெரிகிறது. மேலும், பெண் விவகாரம் தொடர்பாகவும் அவர்களுக்குள் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் முருகனை பழிவாங்கும் நோக்கில் அவரது 4 வயது மகனை கொல்ல முத்துமணி திட்டமிட்டுள்ளார்.
இதன்படி நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகே தனியாக விளையாடிய மோகனை, குடிபோதையில் இருந்த முத்துமணி தனது வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பயன்பாடு இன்றி இருந்த கழிப்பறைக்குள் வைத்து வாயை பொத்தி பிளேடால் கழுத்தறுத்து கொன்றுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க உடலை சாக்கில் கட்டி தோளில் சுமந்து சென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குவாரி பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டில் வந்து தூங்குவது போன்று நடித்தது விசாரணையில் தெரிகிறது.
இருப்பினும், முருகனின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் ஆக்கவேண்டும் என, முத்துமணி குடும்பத்தினர் ஏற்கெனவே கருதியதாகவும் தகவல் கிடைப்பதால் அந்த கோணத்திலும் சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரிக்கிறோம்” என்றனர்.