

திருச்சி: சென்னை போலீஸ்காரரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை என்று நாடகமாடி ரூ.60 லட்சம் பறித்த, திருச்சியைச் சேர்ந்த 2 ரயில்வே போலீஸார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த வளையம்பட்டி அருள்நகரைச் சேர்ந்தவர் ச.ஆரோக்கிய ஜான்கென்னடி(32). சென்னையில் உள்ள ஐ.ஜி. ஒருவரின் வீட்டில் ஆர்டர்லியாகப் பணியாற்றி வரும் இவர், நிலம் வாங்குவதற்காக ரூ.60 லட்சம் பணத்துடன் அக். 30-ம் தேதி சென்னையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் அவரை அணுகிய 3 பேர், தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் என்று கூறிக் கொண்டு, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
பின்னர், அவரது பையில் இருந்த ரூ.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு, “நாங்கள் அழைக்கும்போது நீங்கள் காவல் நிலையம் வரவேண்டும்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் சந்தேகமடைந்த ஆரோக்கிய ஜான்கென்னடி விசாரித்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் யாரும் சோதனைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கடந்த 19-ம் தேதி திருச்சி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில், திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸ்காரர்களாகப் பணியாற்றும் நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் கிறிஸ்டோ குமார்(43), கம்பரசம்பேட்டை தீனதயாள்(37) ஆகியோர் ஆரோக்கிய ஜான்கென்னடியிடம் பணம் பறித்தது தெரியவந்தது. அவர்கள், தங்களது நண்பர்களான திருவெறும்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர்கள் ரஞ்சித்(40), ராஜேந்திரன்(45) ஆகியோருடன் சேர்ந்து ஆரோக்கிய ஜான் கென்னடியிடம் பணத்தைப் பறித்துள்ளனர்.
இதையடுத்து, திருச்சி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா தலைமையிலான போலீஸார், ஜான்சன் கிறிஸ்டோ குமார், தீனதயாள், ரஞ்சித், ராஜேந்திரன் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், ஜான்சன் கிறிஸ்டோ குமார், தீனதயாள் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவிட்டுள்ளார்.