

புதுவையில் சீல் வைக்கப்பட்ட போலி மருந்து தொழிற்சாலை
புதுச்சேரி: போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக புதுச்சேரியில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். புதுச்சேரி சிபிசிஐடி கைப்பற்றி வைத்திருந்த மருந்துகளையும் நேற்று தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கு புதுவை நோணாங்குப்பம், மேட்டுப்பாளையம் உள்பட 13 இடங்களில் குடோன்கள் இருப்பது தெரியவந்தது.
குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா உள்பட 26 பேரை கைது செய்தனர். பல மாநிலங்களுடன் தொடர்பு இருந்ததால் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் தற்போது வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிபிஐ இன்ஸ்பெக்டர் அமித்சராவத் தலைமையிலான குழுவினர் இதன் விசாரணைக்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாரை சந்தித்து, வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி வைத்திருந்த போலி மருந்துகளையும் தங்கள் வசப்படுத்தியுள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சிபிஐக்கு மாற்றப்பட்ட முதல் சில நாட்களில் இவ்வழக்கு தொய்வாக இருந்தது. தற்போது சிபிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்திஉள்ளது.