

அஜீத், சரசம்மாள்
சென்னை: ஐஸ் அவுஸ் பகுதியில், தாயின் கண் எதிரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அஜீத்(25).
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தனது தாய் சரசம்மாள், தந்தை நடராஜன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீடு திரும்பிய அஜீத், 10.50 மணியளவில் தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 பெண்கள், அஜீத்திடம் பேச வேண்டும் என்று கூறி அவரை வீட்டுக்கு வெளியே அழைத்தனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அஜீத்தைச் சுற்றிவளைத்து, சரமாரியாக வெட்டினர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சரசம்மாள், மகனைக் காப்பாற்ற சென்றார். அவரையும் வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இதில் படுகாயம் அடைந்த அஜீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்ட அஜீத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான ஹரிஷ் மற்றும் போண்டா ராஜேஷ் தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
குறிப்பாக அப்பகுதியில் யார் பெரிய ஆள்? என்பதில் போட்டி நிலவியுள்ளது. இதனால், இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி, மாறி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு போண்டா ராஜேஷை அஜீத்தும் அவரது சகோதரரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றதாகவும், அந்த சம்பவத்தில் ராஜேஷ் படுகாயம் அடைந்து உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த மோதலில் அஜீத்தின் சகோதரருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பாக அஜீத்தின் சகோதரருக்கும், ஹரிஷுக்கும் இடையே பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பாக ஹரிஷ் (23) மற்றும் போண்டா ராஜேஷ் (22) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.